ஈரோடு கோர்ட்டில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


ஈரோடு கோர்ட்டில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 2 Feb 2021 10:11 PM GMT (Updated: 2021-02-03T03:41:09+05:30)

திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு ஈரோடு கோர்ட்டில் தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியை சேர்ந்த வேலுசாமி. இவருடைய மகன் கார்த்தி (வயது 28). நீச்சல் பயிற்சியாளர். இவர் திருச்சி மாவட்டத்துக்கு சென்றபோது திருச்சி திரு.வி.க.நகரை சேர்ந்த கருப்பையா என்பவரது மகள் கிருத்திகாவுடன் (24) பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 

அவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கிருத்திகாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 26-ந் தேதி கிருத்திகா வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் கார்த்தியும், கிருத்திகாவும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் பாதுகாப்பு கேட்டு பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு பேச்சுவார்த்தைக்கு கிருத்திகாவின் பெற்றோர் வரவில்லை. இதனால் கார்த்தியுடன் கிருத்திகாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் கிருத்திகாவின் உறவினர் ஒருவர், திருமணம் செய்த காதல்ஜோடிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்தியும், கிருத்திகாவும் பாதுகாப்பு கேட்டு ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, காதல் ஜோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து காதல்ஜோடியை போலீசார் விசாரணைக்காக பவானி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றார்கள். அங்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story