மத்திய பட்ஜெட்: ஈரோடு முக்கிய பிரமுகர்கள் கருத்து


மத்திய பட்ஜெட்: ஈரோடு முக்கிய பிரமுகர்கள் கருத்து
x
தினத்தந்தி 3 Feb 2021 1:00 AM GMT (Updated: 3 Feb 2021 1:07 AM GMT)

மத்திய பட்ஜெட் குறித்து ஈரோடு முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரோடு,

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்த கருத்துகளை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர், கட்சியினர், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:- 

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களை காப்பாற்ற அறிவிப்புகள் ஏதும் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் திட்டங்கள் ஏதும் இல்லை. நலிவுறும் தொழில்களை மீட்க எந்த அறிவிப்பும் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் தென்படவில்லை. வாங்கிய கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் திண்டாடும் நிலையில் புதிதாக கடன் என்ற அறிவிப்புக்கு பதில், கடன்களை தள்ளுபடி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகும். மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்று நிதி திரட்டும் முயற்சி தவறான பொருளாதார கொள்கைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கடனாளி ஆவார்கள்.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சே.நல்லசாமி:-

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்த்தது எதுவும் இல்லை. விவசாயிகள் கடன் பற்றி எதுவும் கூறப்படவில்லை. கடந்த பட்ஜெட்டில் 8 லட்சம் கோடி விவசாயக் கடன் கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள். இப்போது விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி கடனும் சொட்டு நீர் பாசனத்துக்கு 10 கோடி ரூபாய் கடனும் கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள். இதனால் விவசாயிகள் மேலும் கடனாளி ஆவார்கள். விவசாயிகள் பரிந்துரையை ஏற்று நடைமுறைப்படுத்தினால் அவர்களின் வருமானம் 2 மடங்கு உயரும். இதுபற்றி பட்ஜெட்டில் ஏதும் கூறப்படவில்லை. 
வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணை செயலாளர் என்.சிவநேசன்:- 

மத்திய பட்ஜெட் உள்கட்டமைப்பு, விவசாயம், மருத்துவம், சாலை மேம்பாடு என்று 4 விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயத்துக்கு கடன் உதவி என்பது விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். வங்கிகளை சீரமைக்க கூடுதல் நிதி என்பதும் நலிவடைந்த வங்கிகளை மீட்க உதவும். சுகாதாரத்துறைக்கு அதிக நிதியை அரசு ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக சாலைகளுக்காக அதிக நிதி ஒதுக்கீடு என்பது யாரும் எதிர்பார்க்காதது. மெட்ரோ ரெயிலுக்கு நிதி ஒதுக்கீடும் வரவேற்புக்கு உரியது.

நீண்டகாலமாக கிடப்பில் உள்ள சேலம் -கோவை, தூத்துக்குடி-மதுரை தொழில் முனையம் ஆகியவற்றுக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில் புதிதாக 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொழில் முனையம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மூத்த குடிமக்களுக்கு வருமான வரி இல்லை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் வருமான வரி வரம்பு மாற்றம் இல்லாதது நடுத்தர மக்கள், சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகும். பருத்திக்கு வரி விதித்து இருப்பது மேலும் நூற்பாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முக்கிய பிரச்சினையாக உள்ள நீர் மாசு குறைக்க எந்த அறிவிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய இணை செயலாளர் ஆ.ராஜா:- 

ஈரோடு மக்களின் நீண்ட கால கோரிக்கையான 5-வது பிளாட்பாரம் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. விளைபொருட்கள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி என்பது சிறந்த திட்டமாகும். 500 நகரங்களில் சுகாதார குடிநீர் வழங்கும் திட்டம், 17 ஆயிரம் கிராமங்கள், 11 ஆயிரம் நகரங்களில் சுகாதார மையங்கள் அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.
9 உயிரியல் ஆய்வு மையங்கள், 4 வைரஸ் ஆய்வு மையங்கள் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. 7 புதிய ஜவுளி பூங்காக்கள் உருவாக்குவது, 1 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை சிறப்பானவை. 

பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்க கல்லூரி பேராசிரியை எம்.நிஷா:- 

வருமான வரி செலுத்தும் வரம்பை உயர்த்தாமல் இருப்பது சம்பளதாரர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என்பது வரவேற்பு அளிப்பதாக இருக்கிறது. பெண்களின் நலன் கருதி 1 கோடி பெண்களுக்கு இலவச கியாஸ் வழங்கும் திட்டம் மகத்தானது. நகர்ப்புறங்களை தூய்மைப்படுத்தும் திட்டம் வரவேற்புக்கு உரியது. காற்று மாசு கட்டுப்படுத்த நிதி ஒதுக்கி இருப்பது, டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவையும் சிறப்பானவை என்று அவர் கூறினார்.

ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் கே.கலைச்செல்வன் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள ஜவுளி தொழிலுக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சிறு குறு நடுத்தர தொழில்களுக்பு குறைந்த அளவிலேயே நிதி ஒதிக்கப்பட்டு உள்ளது.
7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஆறுதலாக உள்ளது. இதில் ஈரோட்டுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை அளிக்கப்பட்டு உள்ளது போல, தனிநபர் மற்றும் கூட்டு குழு நிறுவனங்களுக்கு வருமானவரி சலுகை ஏதும் வழங்காமல் ஏமாற்றம் அளிக்கப்பட்டு உள்ளது. பொதுவாகவே மத்திய அரசின் பட்ஜெட் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய ஏமாற்றமான பட்ஜெட்டாக உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.

Next Story