திசையன்விளை அருகே ஒரே நாளில் 5 கடைகளில் பணம் கொள்ளை


திசையன்விளை அருகே ஒரே நாளில் 5 கடைகளில் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 3 Feb 2021 2:12 AM GMT (Updated: 3 Feb 2021 2:16 AM GMT)

திசையன்விளை அருகே ஒரே நாளில் 5 கடைகளில் கதவை உடைத்து மர்மநபர்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

திசையன்விளை,

திசையன்விளை சந்தியம்மன் கோவில் அருகில் செல்போன் கடை நடத்தி வருபவர் ஆனந்தராஜ் (வயது 30). நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் இவரது கடையின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதேபோல் தபால் நிலையம் அருகில் உள்ள லட்சுமணன் (40) என்பவரின் செல்போன் கடையிலும் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் 20 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.

மன்னார்புரம் சந்திப்பில் மருந்தகம் நடத்தி வருபவர் பிரமநாயகம் (70). நேற்று முன்தினம் இரவு இவரது கடை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த ரூ.52 ஆயிரத்தை திருடி உள்ளனர். மேலும் அங்கு செல்வராஜ் என்பவர் நடத்தி வரும் பேன்சி கடையின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அள்ளி சென்றுள்ளனர்.

திசையன்விளை சாய்பாபா கோவில் உண்டியலை உடைத்து அங்கிருந்த பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் அருகில் உள்ள அடைக்கலம் காத்த விநாயகர் கோவில் உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

உவரி அருகே உள்ள நவ்வலடியில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வகுமார் (30). இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் எலக்ட்ரானிக் தராசு திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வரும் ஜேக்கப் என்பவரின் கடை பூட்டை உடைக்க மர்மநபர்கள் முயற்சி செய்து உள்ளனர். அப்போது அங்கிருந்த காவலாளியை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திசையன்விளை அருகே ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story