குன்றத்தூர் அருகே விபத்து குடிபோதையில் டிரைவர் ஓட்டிய லாரி மோதி 3 பெண்கள் பலி


குன்றத்தூர் அருகே விபத்து குடிபோதையில் டிரைவர் ஓட்டிய லாரி மோதி 3 பெண்கள் பலி
x
தினத்தந்தி 3 Feb 2021 4:47 AM GMT (Updated: 3 Feb 2021 4:47 AM GMT)

குன்றத்தூர் அருகே லாரி மோதி 3 பெண்கள் பலியானார்கள். குடிபோதையில் இருந்த டிரைவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சாலையின் இரு பகுதிகளுக்கும் நடுவில் காலியிடம் உள்ளது. அந்த இடத்தில் செடிகள் நடும் பணி நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே நடுவதற்கான செடிகள் சரக்கு ஆட்டோவில் கொண்டு வரப்பட்டது. ஆட்டோவை நிறுத்திவிட்டு பள்ளம் தோண்டி செடிகளை நடும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். பூந்தமல்லியை அடுத்த வயலாநல்லூரை சேர்ந்த பச்சையம்மாள் (45), செஞ்சி லட்சுமி (57), சுகந்தி (40), ஆகியோர் சரக்கு ஆட்டோவில் இருந்து செடிகளை இறக்கி கீழே வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

3 பேர் சாவு

அப்போது பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் பச்சையம்மாள், செஞ்சி லட்சுமி இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்த சுகந்தி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். லாரி வேகமாக மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதை அறிந்ததும் அங்கு இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

அடி-உதை

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பழனிவேல் மது குடித்திருந்ததாக தெரிகிறது.

அவரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அமர வைத்திருந்தனர். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து குடிபோதையில் இருந்த லாரி டிரைவரை போலீசார் முன்னிலையிலேயே போலீஸ் வாகனத்தில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபரை அங்கிருந்து அழைத்து் சென்றனர். உரிய பாதுகாப்பு வசதிகள இல்லாமல் சாலையின் ஓரம் செடிகள் நடும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டதாலும் குடிபோதையில் லாரியை டிரைவர் இயக்கியதும் விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இறந்து போனவர்களின் உடல்களை பார்த்து உறவினர்களும் உடன் வேலை செய்த பெண்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் கிரேன் உதவியுடன் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார்அப்புறப்படுத்தினார்கள்.

Next Story