காட்டு யானையை அழைத்து செல்லும் பணி: பழங்களை ருசித்தவாறு அமைதியாக வனத்துறையினரின் பின்னால் சென்றது
காட்டு யானையை 2-வது நாளாக அழைத்துச் செல்லும் பணி நடந்தது. யானையும் பழங்களை ருசித்தவாறு அமைதியாக வனத்துறையினரின் பின்னால் சென்றது. அந்த யானையை மரக்கூண்டில் அடைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது
கூடலூர்
காட்டு யானையை 2-வது நாளாக அழைத்துச் செல்லும் பணி நடந்தது. யானையும் பழங்களை ருசித்தவாறு அமைதியாக வனத்துறையினரின் பின்னால் சென்றது. அந்த யானையை மரக்கூண்டில் அடைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மசினகுடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து முகாமிட்டு வந்தது. இதை வனப்பகுதிக்கு விரட்டியும் பலன் ஏற்படவில்லை. தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு வந்தது. அந்த யானைக்கு பொதுமக்கள் ரிவால்டோ என்று பெயர் சூட்டி அழைத்து வந்தனர்.
அந்த காட்டு யானையை முதுமலைக்கு கொண்டு செல்ல வனத்துறை யினர் முடிவு செய்தனர். ஆனால் யானையின் உடல் நலனை கருத்தில் கொண்டு மயக்க ஊசி செலுத்தாமல் பழங்கள், கரும்புகளை வழங்கி 12 கி.மீ. தூரம் கால்நடையாக முதுமலைக்கு அழைத்து செல்லும் பணியை வனத்துறையினர் தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து வாழைத்தோட்டம் பகுதியில் நின்றிருந்த காட்டு யானைக்கு மூங்கில் தழை, தர்பூசணி, வாழைப்பழம் மற்றும் கரும்புகள் வழங்கியவாறு 4 கி.மீ. தூரம் அழைத்து வந்தனர். பின்னர் இருள் சூழ தொடங்கிவிட்டதால் மாவனல்லா என்ற இடத்தில் காட்டு யானையை வனத்துறையினர் நிறுத்தி வைத்து இரவு முழுவதும் பசுந்தீவனம் பழங்கள், கரும்புகளை வழங்கினர்.
இதனால் காட்டு யானை அப்பகுதியில் தொடர்ந்து நின்றிருந்தது. மேலும் வனத்துறையினரும் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவனல்லாவில் இருந்து காலை 6.30 மணிக்கு காட்டு யானையை முதுமலைக்கு அழைத்துச் செல்லும் பணியில் வனத்துறையினர் 2-வது நாளாக ஈடுபட்டனர்.
தொடர்ந்து பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கியவாறு அழைத்துச் சென்றனர். அந்த உணவுகளை ருசித்தவாறு தொட்டிலிங்க், பொக்கா புரம் வழியாக 4 கி.மீ தூரம் காட்டு யானை அமைதியாக வனத்துறையினருடன் நடந்து சென்றது. இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது.
காட்டு யானையை இன்னும் சில கி.மீ. தூரம் பழங்கள் வழங்கியவாறு அழைத்து சென்றால் முதுமலையை அடைந்து விடலாம். 2 நாட்களாக ஒவ்வொரு பகுதியையும் எதிர்பார்த்ததை விட மிக எளிதாக யானையை வன ஊழியர்கள் அழைத்து வந்துவிட்டனர்.
ஆனால் முதுமலை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்வது சற்று சவாலானது. இருப்பினும் காட்டு யானையை தொடர்ந்து அழைத்து செல்லப்படுகிறது. இதுவரை அந்த யானையும் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
முதுமலைக்கு யானை வந்தவுடன் மரக்கூண்டில் அடைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story