கொரோனா கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்படும்
தமிழ்நாடு, கேரளான பகுதிகளில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.
கரூர்,
கரூர் ரெயில் நிலையத்தை நேற்று தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு செய்தார். அப்போது ரெயில் நிலையத்தில், வீணாகும் கழிவு நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு எந்திரம், ரெயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ சிகிச்சை மையம் மற்றும் கொரோனாவை தடுக்க பயணிகள் வசதிக்காக வைக்கப்பட்டிருக்கும் கைக்கழுவும் திரவ எந்திரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேட்டி
பின்னர் ஜான் தாமஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு, கரூர், திருச்சி மார்க்கத்தில் ஈரோடு, கரூர் ரெயில் நிலையங்களை ஆய்வு செய்தேன். இங்கு பயணிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு கட்டுமானப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் தென்னக ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் என மொத்தம் 185 பேர் இறந்துள்ளனர்.
மேலும் ரெயில்வே குடும்பத்தில் மட்டும் 225 பேர் இறந்துள்ளனர். கரூர்-சேலம் பயணிகள் ரெயில் இப்போதைக்கு இயக்கப்போவதில்லை. தென்னக ரெயில் வேக்குட்பட்ட தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்படும்.
கரூர்-பெங்களூரு விரைவு ரெயில்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், கேரளாவில் அதிகம் உள்ளது. இந்நிலையில் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டால், ரெயிலில் கூட்டம் அதிகமாகி தொற்றும் அதிகளவில் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இப்போதைக்கு சென்னையில் மட்டும் புறநகர் ரெயில் இயக்க முடிவு செய்துள்ளோம்.
கரூர்-சேலம் இருவழிப்பாதை பணிகளுக்கு போதிய நிதியில்லாததால் இப்போதைக்கு அப்பணி முடங்கியுள்ளது. கரூர் ரயில் நிலையத்தில் எஸ்குலேட்டர் மற்றும் லிப்ட் வசதி ஏற்படுத்தவும் போதிய நிதியில்லை. கரூர்-பெங்களூரு விரைவு ரெயில் பயணிகள் நலன் கருதி இயக்க உரிய முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சேலம் கோட்ட மேலாளர் கவுதம்சீனிவாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story