தாளவாடி அருகே கிராமத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம்: பசு மாட்டை அடித்து கொன்றது


தாளவாடி அருகே கிராமத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம்: பசு மாட்டை அடித்து கொன்றது
x
தினத்தந்தி 5 Feb 2021 3:49 AM IST (Updated: 5 Feb 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே கிராமத்தில் புகுந்த சிறுத்தை பசுமாட்டை அடித்து கொன்றது.

தாளவாடி,

தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமத்துக்குள் புகுந்து வீடு மற்றும் தோட்டம் முன்பு கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடுகளை கொன்று தின்று வருகின்றன.
சில நேரம் காவலுக்காக விடப்பட்ட நாயையும் விட்டு வைப்பதில்லை. 

இதனால் விவசாயிகள், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் மல்குத்திபுரம், பீம்ராஜ்நகர், தொட்டகாஜனூர், சூசைபுரம் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்குள்ள தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. அதன் பீதி  அடங்குவதற்குள் மீண்டும் சிறுத்தை தனது அட்டகாசத்தை தொடங்கி உள்ளது. 

தாளவாடி அருகே உள்ள ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 51). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். கந்தசாமி வழக்கம்போல் மாடுகளை வீட்டின் முன்பு கட்டி விட்டு நேற்று முன்தினம் இரவு தூங்க சென்று விட்டார். தூங்கி எழுந்து நேற்று காலையில் பார்த்த போது அதில் ஒரு பசு மாட்டை காணவில்லை. இதனால் அவர் தேடிச்சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து சற்று தூரத்தில் அவரது பசு மாடு குடல் சரிந்து வெளியே விழுந்த நிலையில் இறந்து கிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். மாட்டின் அருகே ஏதோ ஒரு விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது.

இதுபற்றி கந்தசாமி தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று, பதிவான விலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். அது சிறுத்தையின் கால்தடம் என்பது தெரிய வந்தது.  வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் வெளியேறிய சிறுத்தை ஒன்று ஒசூர் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. 

பின்னர் கந்தசாமியின் வீட்டு முன்பு கட்டப்பட்டிருந்த பசு மாட்டை தாக்கி கொன்று வாயில் கவ்வியபடி சிறிது தூரம் இழுத்து சென்றுள்ளது. அங்கு மாட்டின் இறைச்சியை தின்றுள்ளது. இதில் மாட்டின் குடல் வெளியே வந்தது. பின்னர் மாட்டின் உடலை அங்கேயே போட்டு்விட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது தெரிய வந்தது. குடியிருப்பு நிறைந்த பகுதியில் மாட்டை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story