சென்னையில் பொது அமைதியை நிலைநாட்ட முக்கிய ரவுடிகள் 89 பேர் சிறையில் அடைப்பு போலீஸ் கமிஷனர் தகவல்
சென்னையில் பொது அமைதியை நிலை நாட்ட முக்கியமான ரவுடிகள் 89 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள், உரிய நிப ந்தனையை மீறி தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டவர்களின் ஜாமீனும் ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னையில் அமைதியை நிலைநாட்ட வழிவகை செய்யப்படுகிறது.
89 முக்கிய ரவுடிகள்
அந்த வகையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி இதுவரை 2,614 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கல்வெட்டு ரவி, சீசிங்ராஜா, ராதாகிருஷ்ணன், எண்ணூர் தனசேகர், காக்காதோப்பு பாலாஜி, ஆற்காடு சுரேஷ், தணிகா, கிருஷ்ணவேணி, தட்சிணாமூர்த்தி, பல்லு மதன் போன்ற பிரபலமான முக்கிய ரவுடிகள் 89 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடை க்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 571 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் 3,705 குற்றவாளிகள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story