தொகுதி உடன்பாடு குறித்து என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமியிடம் பாரதீய ஜனதா பேச்சுவார்த்தை


என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி
x
என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி
தினத்தந்தி 12 Feb 2021 3:27 PM GMT (Updated: 12 Feb 2021 3:27 PM GMT)

தொகுதி உடன்பாடு குறித்து ரங்கசாமியுடன் பாரதீய ஜனதா கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
புதுவையில் கடந்த 31-ந்தேதி பாரதீய ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசும்போது, புதுவையில் 23 தொகுதிகளில் தாமரை மலரும் என்று குறிப்பிட்டார். அதாவது 23 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் என்றார்.

அவரது இந்த பேச்சு பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு உத்வேகத்தை கொடுத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. தொடரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதிர்வலை
முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பாரதீய ஜனதா கட்சி முன்னிறுத்தி பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்தான் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கருதி வருகின்றனர். ஆனால் கூட்டணியில் மிகப்பெரிய கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் இருப்பதால் ரங்கசாமிதான் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கையில் இருக்கும் நிலையில் ஜே.பி.நட்டாவின் பேச்சு அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இ்ந்தநிலையில் கடந்த 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா நடந்தது. இந்த விழாவில் பேசிய கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி நாம்தான் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று உறுதிபட கூறினார். ரங்கசாமியின் பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் வேட்பாளராக தன்னை ஏற்காவிட்டால் அவர் தனித்துப் போட்டியிடும் முடிவில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை அரவணைக்க காங்கிரஸ் கட்சியும் தயார் நிலையில் உள்ளது.

வெற்றியை ருசிக்க...
எனவே ரங்கசாமியை சமாதானப்படுத்தி கூட்டணியில் நீடிக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி சார்பில் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. கட்சியின் மேலிட தலைவர்கள் ரங்கசாமியை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். ரங்கசாமி இந்த கூட்டணியில் இருந்தால் வெற்றியை ருசிப்பது எளிதாக இருக்கும் என்று அவர்கள் கருதுவது தான் இதற்கு காரணம்.இதுதொடர்பாக மேலிட பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா நேரில் சந்தித்து ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின்போது முதலில் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரசுக்கு மட்டும் 20 தொகுதிகளை கேட்டுள்ளார். ஆனால் 12 தொகுதிகள் தருவதாக பாரதீய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் பதவி
அதன்பின்னர் 18 தொகுதிக்கு ரங்கசாமி இறங்கி வந்துள்ளார். ஆனால் 15 தொகுதிகளை கொடுப்பதாக பாரதீய ஜனதா சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 15 தொகுதிகளை அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகள் பிரித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. தொகுதிகளை குறைத்துக்கொள்ள ரங்கசாமி முன்வந்தாலும் முதல்-அமைச்சர் பதவி என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

இதுதொடர்பாக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறும்போது, ரங்கசாமி உறுதியாக பாரதீய ஜனதா கூட்டணியில்தான் உள்ளார். புதுவையில் பாரதீய ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடும். முதல்-அமைச்சர் பதவி தொடர்பாக இறுதிகட்ட பேச்சுவார்த்தையின்போது தெரியவரும் என்றனர்.

Next Story