தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் கலெக்டர் சாந்தா தகவல்


தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 13 Feb 2021 6:06 AM IST (Updated: 13 Feb 2021 6:06 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே சொரக்குடியில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.

திருவாரூர்,

நன்னிலம் அருகே சொரக்குடியில் வருகிற 27-ந் தேதி(சனிக்கிழமை) தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

படித்து வேலை தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நன்னிலம் அருகே உள்ள சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

10 ஆயிரம் பேர்

வேலை வாய்ப்பு முகாமில உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் 5 அமைச்சர்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணைகளை வழங்குகிறார்கள்.

முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் சுமார் 10 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இணையதளம் மூலம்...

முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுய விவரக்குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் thiruvarur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தும் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூஷ்ணகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், உதவி கலெக்டர்கள் பாலச்சந்திரன், புண்ணியகோட்டி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story