கவர்னர் மாளிகையில் நிதியை செலவு செய்வதில் முறைகேடு: புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி


கவர்னர் மாளிகையில் நிதியை செலவு செய்வதில் முறைகேடு: புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி
x
தினத்தந்தி 13 Feb 2021 8:19 PM IST (Updated: 13 Feb 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் மாளிகையில் நிதியை செலவு செய்வதில் முறைகேடு நடக்கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளாரே? என்று கேட்ட போது முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

எதிர்கொள்ள தயார்
முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் எந்தவித முறைகேடும் நடைபெற வில்லை. இது குறித்து யார் வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கடந்த ஆட்சி போல் எங்களுடைய ஆட்சி கிடையாது. முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கும் போது சம்பந்தப்பட்டவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு அதன் பின்னர் தான் அவர்களுக்கு காசோலை கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக எந்த விசாரணை வேண்டுமானாலும் வைக்கலாம். அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

கவர்னர் மாளிகை முறைகேடு
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு பட்ஜெட்டில் ரூ.7 கோடியே 80லட்சம் ஒதுக்கியுள்ளோம். அந்த நிதியில் என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முதலில் பகிரங்க விசாரணை நடத்துவோம். கவர்னர் மாளிகையில் நிதியை செலவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. தேவையில்லாமல் பணம் செலவு செய்யப்படுகிறது. நாள்தோறும் ஒவ்வொரு விழாக்கள் நடத்தப்படுகிறது. அதற்கு எந்த நிதி செலவு செய்யப்படுகிறது என்பது குறித்து கணக்கு எதுவும் கிடையாது. கவர்னர் மாளிகையில் செய்யப்படும் செலவு குறித்து விசாரிக்கும்படி தலைமை செயலாளருக்கு 
உத்தரவிட உள்ளேன்.

கவர்னருக்கு அதிகாரம் என்ன?
புதுவையில் உள்ள வாய்க்கால்களை தூர்வார கவர்னர் கிரண்பெடி சமூக பொறுப்பு நிதியை வசூலித்தார். ஏராளமானோரிடம் காசோலையாக பணம் பெற்றார். அந்த நிதியை நிர்வகிக்கின்ற பொறுப்பு முதல்-அமைச்சருக்கு தான் உண்டு என்று நான் கூறினேன்.

அதன் பின்னர் அவர் வசூலித்த தொகையை மீண்டும் அவர்களுக்கே திருப்பி கொடுத்து விட்டார். இதையடுத்துஅந்த நிதியை பெறாமல் வேலையை மட்டும் செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். சமூக பொறுப்பு நிதியை பெற கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story