திருப்பூர் மாவட்டத்தில் விபத்தை தடுக்க போலீசாருக்கு புதிய செயலி பயிற்சி வகுப்பு
திருப்பூர் மாவட்டத்தில் விபத்தை தடுக்க போலீசாருக்கு புதிய செயலி பயிற்சி வகுப்பு
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் விபத்தை தவிர்க்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட இருப்பதால் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விபத்தை தடுக்க செயலி அறிமுகம்
சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் விபத்தின் காரணங்கள் மற்றும் உயிரிழப்பு, வாகன விவரங்கள் உள்ளிட்டவற்றை செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து ஆவணங்களை சேகரிக்கும் பணியை அரசு விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக ஐராடு என்ற புதிய செல்போன் செயலி நாளை (திங்கட்கிழமை) முதல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதை தேசிய தகவலியல் மையத்தினர் வடிவமைத்துள்ளனர்.
காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை ஆகிய 4 துறைகளையும் இணைத்து இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்தால் காவல்துறையினர் அந்த இடத்துக்கு சென்று விபத்தில் காயம் மற்றும் இறந்தவர் விவரம், வாகனத்தின் விவரம், விபத்து நடந்த இடம், விபத்துக்கான காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு
இந்த செயலியில் விபத்து விவரங்களை பதிவு செய்வது குறித்த பயிற்சி வகுப்பு நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தேசிய தகவலியல் மைய அதிகாரி கண்ணன் பயிற்சி அளித்தார். இதில் காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு போலீஸ் நிலைய அளவில் உள்ள போலீசார் தங்கள் செல்போன் செயலி மூலமாக விபத்து வழக்கு விவரங்களை பதிவேற்றம் செய்ய முடியும். வட்டார போக்குவரத்து அதிகாரி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, சுகாதார அலுவலர் ஆகியோரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து இந்த செயலியில் விவரங்களை பதிவேற்றம் செய்வார்கள். இதை கொண்டு விபத்துக்கான காரணத்தை அறிந்து விபத்தை தடுப்பதற்கு சாலையை விரிவாக்கம் செய்வது, வாகன வேகத்தை குறைப்பதற்கான வழிமுறை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து விபத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் வரும் காலத்தில் அந்த பகுதியில் மேற்கொள்ளப்படும். விபத்தில்லா நகரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலி நாளை முதல் தமிழக அளவில் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story