நகைக்கடை உரிமையாளரின் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்
ஏரியூர் அருகே நகைக்கடை உரிமையாளரின் கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஏரியூர் மற்றும் பென்னாகரத்தில் நகைக் கடை வைத்துள்ளார். முருகேசன் தனது நண்பர் பழனியுடன் காரில் புதுச்சேரி சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி பகுதியில் நேற்று வந்்த போது காரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
இதனை கண்ட முருகேசன் மற்றும் அவரது நண்பர் பழனி ஆகியோர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். அதற்குள் காரில் தீப்பிடித்து மளமளவென எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் இது குறித்து பென்னாகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
ஆனால் தீயணைப்பு துறையினர் தர்மபுரியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்கு சென்றதால் தீயணைப்பு வாகனம் வரவில்லை. இதனால் கிராமமக்களே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சாலையில் கொட்டப்பட்டிருந்த கொள்ளு பயிர்கள், கார் எஞ்சின் பகுதியில் சிக்கியதால் காரில் தீப்பிடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story