ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடன் உதவி


ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடன் உதவி
x
தினத்தந்தி 13 Feb 2021 8:09 PM GMT (Updated: 13 Feb 2021 8:09 PM GMT)

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.2 கோடியே 31 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் கண்ணன் வழங்கினார்.

விருதுநகர்,
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.2 கோடியே 31 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் கண்ணன் வழங்கினார்.
புரிந்துணர்வு பயிற்சி 
விருதுநகர்அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கிகளுக்கான புரிந்துணர்வு பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியினை தொடங்கி வைத்தும், மகளிர் சுய உதவி குழு மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கும் ரூ.2 கோடியே 31 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கியும் கலெக்டர் கண்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 6 ஆயிரத்து 260 குழுக்களும், 97 ஆயிரத்து 436 உறுப்பினர்களும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் 1,750 குழுக்களும், 63,554 உறுப்பினர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
தையல் தொழில் 
 இதில் அவர்களது நிரந்தர சேமிப்பின் மூலம் வங்கியில் நடவடிக்கை மேற்கொள்வதுடன் தங்களுக்குள் கடன் வழங்கி அதன் அடிப்படையில் வங்கியில் கடன் பெற்று தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதுடன் விவசாயம், ஆடு வளர்ப்பு, கூடை முடைதல், அழகு நிலையம், தையல்தொழில், சணல் நார் பொருட்கள் தயாரித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் சுயகுழுக்களாக உருவாகி தொழில் நிறுவனமாக செயல்பட தயார் நிலையில் உள்ளனர். 
 மானியம்
மேலும் மாவட்டத்தில் 450 பஞ்சாயத்துகளில் செயல்பட்டு வரும் மக்கள் அமைப்புகளான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூக முதலீட்டு நிதி, ஆதாரநிதி, அமுதசுரபி நிதி என ரூ.45 கோடிவரை அரசுமூலம் வழங்கப்பட்டு தங்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கி வருகின்றனர்.
அத்துடன் வங்கியின் மூலம் நடப்பாண்டில் நிதி இணைப்பாக ரூ. 453 கோடி வழங்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்கள்வெவ்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 2,146 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 82 லட்சம் வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
இதில் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகவேல், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மல்லிகாதேவி, மகளிர் திட்ட அலுவலர்கள் சுந்தரமூர்த்தி, வசுமதி, பொன்னு குமார் உள்பட மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், மேலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story