பாளையங்கோட்டையில் மாநில கைப்பந்து போட்டி
பாளையங்கோட்டையில் மாநில கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது.
நெல்லை:
பாளையங்கோட்டையில் நடந்து வரும் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டியில் சென்னை இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., அணிகள் வெற்றி பெற்றன.
கைப்பந்து போட்டி
நெல்லை மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாநில மின்னொளி கைப்பந்து போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது.
போட்டி தொடக்க விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், தமிழக கைப்பந்து கழக தலைவர் சித்திரை பாண்டியன், துணை தலைவர் ராமானுஜம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சியில் அந்தோணி தாமஸ், மாவட்ட கைப்பந்து கழக புரவலர் எம்.கே.எம்.முகமது ஷாபி, தலைவர் எம்.கே.எம். முகமது நாசர், பிரபாகரன், வக்கீல் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி, பொள்ளாச்சி எஸ்.டி.சி., கல்லுாரி, சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி, சென்னை தமிழக காவல்துறை அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை சிவந்தி அகாடமி, கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்., கல்லுாரி, சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி, சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்தியன் வங்கி அணி வெற்றி
நேற்று நடந்த ஆண்களுக்கான லீக் போட்டியில் இந்தியன் வங்கி அணி, பொள்ளாச்சி எஸ்.டி.சி., அணியை 30 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
பெண்களுக்கான பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி., அணியை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து லீக் போட்டிகளில் அணிகள் மோதின.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) லீக் போட்டிகள் இரவு வரை நடக்கிறது. லீக் போட்டிகள் முடிவில் பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினர்கள் லீக்கில் அதிக புள்ளிகள் பெறும் அணிகளுக்கும், சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கும் பரிசுகள் வழங்கவுள்ளனர்.
Related Tags :
Next Story