வியாபாரியிடம் செல்போன் பறித்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி


வியாபாரியிடம் செல்போன் பறித்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி
x
தினத்தந்தி 16 Feb 2021 6:07 PM GMT (Updated: 2021-02-16T23:37:45+05:30)

உளுந்தூர்பேட்டை அருகே ஊதுபத்தி வியாபாரியிடம் செல்போன் பறித்த வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை

வியாபாரி

திண்டிவனத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் மகன் இதயத்துல்லா(வயது 28). இவர் மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகிறார். 
சம்பவத்தன்று இதயத்துல்லா உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.எஸ்.தக்கா என்கிற இடம் அருகே சாலை ஓரத்தில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் இதயத்துல்லாவின் கையில் இருந்த செல்போனை பறித்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். 

தவறி விழுந்தனர்

பின்னர் அந்த மர்ம நபர்கள் உளுந்தூர்பேட்டை நகரில் மற்றொருவரிடம் செல்போனை பறிக்க முயன்றபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இதைப் பார்த்து அங்கே நின்ற பொதுமக்கள் 2 மர்ம நபர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தியாகதுருகம் அருகே உள்ள புது மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன்(வயது 28), தமிழ்ச்செல்வன்(28) என்பதும், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் டிப்ளமோ படித்துள்ள தினகரன் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு தனது நண்பருடன் சேர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட போது போலீசில் சிக்கியது தெரியவந்தது. 

கைது

விசாரணைக்கு பின்னர் தினகரன், தமிழ்ச்செல்வன் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஊதுபத்தி வியாபாரியிடம் செல்போனை பறித்துவிட்டு மற்றொரு இடத்தில் செல்போனை பறிக்க முயன்றபோது மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story