கருங்கல் ஏற்றி வந்த லாரி, மற்றொரு லாரி மீது மோதி கவிழ்ந்தது


கருங்கல் ஏற்றி வந்த லாரி, மற்றொரு லாரி மீது மோதி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 16 Feb 2021 6:55 PM GMT (Updated: 2021-02-17T00:25:27+05:30)

திருக்கடையூரில் கருங்கல் ஏற்றி வந்த லாரி, மற்றொரு லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருக்கடையூர்;
திருக்கடையூரில் கருங்கல் ஏற்றி வந்த லாரி, மற்றொரு லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
சாலையில் லாரி கவிழ்ந்தது
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே தரங்கம்பாடியில் மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக வெளியூரிலிருந்து லாரிகள் மூலம் கருங்கற்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்படி நேற்று தரங்கம்பாடி மீனவ கிராமத்துக்கு  கருங்கல் ஏற்றி  கொண்டு ஒரு லாரி திருக்கடையூர் வழியாக சென்றது. லாரியை விழுப்புரம் மாவட்டம் வி.மாத்தூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி(வயது35) என்பவர் ஓட்டி சென்றார். 
அதிகாலை சுமார் 4.30 மணியளவில் திருக்கடையூர் கடை வீதி அருகே  சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த செப்டிக் டேங் கிளினிங் லாரி மீது மோதியது. பின்னர் அதே வேகத்தில்   அருகில் இருந்த மின் கம்பம் மற்றும் வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதி சாலையில் கவிந்தது. இதில் செப்டிக் டேங்க் கிளினிங் லாரி, மின்கம்பம் மற்றும் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. 
போக்குவரத்து பாதிப்பு
விபத்தில்  படுகாயமடைந்த லாரி டிரைவர் மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொறையார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், சாலையில் கவிந்து கிடந்த லாரி மற்றும் கருங்கற்களை கிரேன் மற்றும் பொக்லின் எந்திரம் மூலம் அப்புறபடுத்தினர். இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக   திருப்பிவிடப்பட்டது. சாலையில் லாரி கவிழ்ந்து கிடந்ததால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற பகுதி மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதி ஆகும். அதிகாலை சுமார் 4.30 மணியளவில் விபத்து நடந்ததால் அப்பகுதியில் யாரும் இல்லை. இதனால் அப்குதியில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

Next Story