ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்


ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Feb 2021 9:39 PM GMT (Updated: 16 Feb 2021 9:39 PM GMT)

திருச்சுழியில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரியாபட்டி, 
திருச்சுழியில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
பொதுப்பாதை 
திருச்சுழி குண்டாற்றுப்பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவர் கட்டும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சுற்றுச்சுவர் கட்டியுள்ள பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் மற்றும் பொதுப்பாதை ஆகியவைகளை மறைத்து கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் குமார், பொதுமக்கள் ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுப்பாதை மற்றும் குடிநீர் குழாயை விடுத்து கட்டிடம் கட்ட வேண்டும் என கூறியும் நெடுஞ்சாலை துறையினர் கேட்காததால் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராஜபாளையம் - ராமேஸ்வரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு 
இதனால் அந்த பகுதியில்  1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story