வரதட்சணை கேட்டு துன்புறுத்தி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


வரதட்சணை கேட்டு துன்புறுத்தி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Feb 2021 5:18 AM GMT (Updated: 17 Feb 2021 5:18 AM GMT)

வரதட்சணை கேட்டு துன்புறுத்தி மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஆலந்தூர்,

சென்னை கிண்டி நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவரது மனைவி அனிதா (27). இவர்களுக்கு சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த நிலையில், தனது மகளுக்கு திருமணத்தின் போது 70 பவுன் தங்க நகைகள் போட்டதாகவும் , கூடுதலாக வரதட்சணை நகை கேட்டு கணவர் ராஜேஷ் மற்றும் அவரது தாய் ராஜம்மாள் (61) ஆகியோர் கொடுமைப்படுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்துக் கொண்டதாக கிண்டி போலீசில் அனிதா தந்தை ராஜசேகரன் புகார் செய்தார்.

இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தாய்-மகனுக்கு சிறை

அதில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக ராஜேசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அவரது தாய்க்கு ராஜம்மாளுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து தாய் மற்றும் மகன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கை சிறப்பாக நடத்தி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தண்டனை பெற நடவடிக்கை எடுத்த கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, கோர்ட்டு போலீஸ்காரர் சரவண, விஜய், ஆனந்த் ஆகியோரை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் பாராட்டினார்.


Next Story