பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 17 Feb 2021 1:59 PM GMT (Updated: 2021-02-17T19:29:06+05:30)

குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. அப்போது, கடல் ஆலா பறவைகள் குமரியில் இருந்து இடம் பெயர்ந்து விட்டது தெரியவந்தது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. அப்போது, கடல் ஆலா பறவைகள் குமரியில் இருந்து இடம் பெயர்ந்து விட்டது தெரியவந்தது. 
பறவைகள் கணக்கெடுப்பு 
குமரி மாவட்டம் அதிகளவில் நீர்நிலைகள் நிறைந்ததோடு பசுமையும் நிறைந்த மாவட்டமாகும். இதனால் இங்கு ஏராளமான பறவைகள் வசிக்கின்றன. அதோடு பருவ மாற்றம் காரணமாக வெளிநாடுகளில் இருந்தும் குமரி மாவட்டம் நோக்கி பறவைகள் படையெடுத்து வருவது உண்டு. 
இந்தநிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் பறவைகள் எண்ணிக்கை குறைந்திருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது. மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நவீன கருவிகள் 
ஒவ்வொரு குழுவிலும் வனத்துறையினரும், தன்னார்வலர்களும் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் நேற்று காலை 6 மணி முதல் 8.30 மணி வரை பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் சுசீந்திரம், தேரூர், மணக்குடி, புத்தளம், மாணிக்கபுரம், ராஜாக்கமங்கலம், சாமிதோப்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் நடந்தது. வனத்துறை குழுவினர் நவீன கருவிகளை பயன்படுத்தி நீர்நிலைகள், அதை ஒட்டியுள்ள மரங்கள் மற்றும் பாறை இடுக்குகளில் வசிக்கும் பறவைகளை பார்த்து கணக்கெடுத்தனர்.
அப்போது பல்வேறு வகையிலான பறவைகளை குழுவினர் பார்த்தனர். ஆனால் பறவைகள் எண்ணிக்கையை பொருத்த வரையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்து இருப்பதாக வனத்துறையினர் கூறினர். இதுபற்றி பறவைகள் கணக்கெடுப்பு குழுவில் இடம்பெற்றிருந்த பறவைகள் ஆர்வலர் டேவிட்சனிடம் கேட்டபோது கூறியதாவது:-
வெளிநாட்டு பறவைகள் 
குமரி மாவட்டத்தில் ஒகி புயலுக்கு பிறகு இருந்தே பறவைகள் வரத்து குறைந்து உள்ளது. எனினும் கடந்த செப்டம்பர் மாதம் 500-க்கும் மேற்பட்ட பூ நாரை பறவைகள் இருந்தன. 6 வகையான கடல் ஆலா பறவைகள் வசித்தன. ஆனால் தற்போது கணக்கெடுப்பு நடத்தியபோது அந்த பறவைகள் இல்லை. கடந்த சில மாதங்களாகவே உப்பளம் பகுதியில் பொக்லைன் எந்திரம் கொண்டு பணி நடக்கிறது. அதோடு புத்தளத்தில் 3-வது உப்பளத்தில் தண்ணீரே இல்லை. எனவே உணவு கிடைக்காததால் பறவைகள் வேறு இடம் நோக்கி சென்று இருக்கலாம்.
அதே சமயம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு பறவைகளை பார்க்க முடிந்தது. அவை அனைத்தும் ஆர்ட்டிக் பகுதியில் இருந்து வந்தவை ஆகும். உள்ளான், கொசு உள்ளான், மணல் கொத்தி, ஊசிவாழ் வாத்து, மண்வெட்டி அழகுதாரா, கார்கனி உள்ளிட்ட வகையான வெளிநாட்டு பறவைகள் வசித்து வருகின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. மொத்தத்தில் சுமார் 50 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை கணக்கெடுப்பின் போது பார்த்தோம்.
வனத்தில் வசிக்கும் பறவைகள் 
குமரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் வசிக்கும் பறவைகள் மட்டுமே கணக்கெடுக்கப்படுகின்றன. வன பகுதியில் வசிக்கும் பறவைகளை கணக்கெடுப்பது இல்லை. ஆனால் வனப்பகுதிகளில் சுமார் 220 வகையான பறவைகள் வசிக்கின்றன. குறிப்பாக வனத்தில் இருவாச்சி என்ற பறவை உயரமான மரத்தின் உச்சியில் கூடு கட்டி வசித்து வருகிறது. அந்த பறவைகள் குஞ்சுகளை வளர்ப்பது ஆபூர்வமாக இருக்கும். எனவே வனத்தில் வசிக்கும் பறவைகளையும் கணக்கெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கணக்கெடுப்பு பணி இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Next Story