பருவம் தப்பிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம்


பருவம் தப்பிப் பெய்த மழையால்  பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம்
x
தினத்தந்தி 17 Feb 2021 5:27 PM GMT (Updated: 17 Feb 2021 5:27 PM GMT)

உடுமலை பகுதியில் பருவம் தப்பிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உடுமலை
உடுமலை பகுதியில் பருவம் தப்பிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மார்கழி மழை
உடுமலை பகுதியில் அமராவதி அணையை அடிப்படையாகக் கொண்டு எலையமுத்தூர், கல்லாபுரம், அமராவதி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்ததாலும் அமராவதி அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததாலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர். 
ஆனால் பருவம் தப்பி மார்கழியில் பெய்த மழையால் நெற்பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் மகசூல் இழப்பை சந்தித்த விவசாயிகள் அரசு நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வேளாண்மைத் துறையினர், வருவாய்த் துறையினர், புள்ளியியல் துறையினர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தினர் இணைந்து பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஆய்வு மேற்கொண்டு அதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
நிவாரணம்
அதனடிப்படையில் தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது:-
உடுமலை வட்டாரத்தில் 235 விவசாயிகளின் நெற்பயிர்கள் பருவம் தப்பிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 2 விவசாயிகள் ஏற்கனவே நிவர் புயலின் போது பயிர் பாதிப்பு ஏற்பட்டு நிவாரணம் பெற்றுள்ளனர். எனவே அவர்களைத் தவிர பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பின் அடிப்படையில் ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ. 8 ஆயிரம் வரை அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக அரசு செலுத்தி வருகிறது. இதுவரை நிவாரணம் கிடைக்காத விவசாயிகளுக்கும் படிப்படியாக நிவாரணத் தொகை வந்து சேரும். அத்துடன் பயிர்க்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் விரைவில் இழப்பீடு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறுஅவர்கள்  கூறினர்.

Next Story