21-ந்தேதி முதல்-அமைச்சருக்கு கரூரில் பாராட்டு விழா


web photo
x
web photo
தினத்தந்தி 17 Feb 2021 6:21 PM GMT (Updated: 2021-02-17T23:51:03+05:30)

விவசாய பயிர் கடனை தள்ளுபடி செய்த முதல்-அமைச்சருக்கு வருகிற 21-ந் தேதி விவசாயிகள் சார்பில் கரூரில் பாராட்டு விழா நடக்கிறது.

கரூர்
முதல்- அமைச்சர் வருகை 
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவுத்திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. எனவே இந்த திட்டத்தை வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவிற்கு வருகை தரும் முதல்- அமைச்சர் அங்கு விழா முடிந்ததும் அங்கிருந்து கரூருக்கு வருகிறார். பின்னர் கரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் அன்று மதியம் 3 மணியளவில் கரூர்-வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தில் உழவன் திருவிழா மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பாராட்டு
 இந்த மாநாட்டில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. 
மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், பாராட்டு விழாவை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் விவசாய கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

Next Story