சாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக கூறி கண்ணீர் வடித்த இளம்பெண்ணை கட்டியணைத்த கனிமொழி எம்.பி.


சாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக கூறி கண்ணீர் வடித்த இளம்பெண்ணை கட்டியணைத்த கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 17 Feb 2021 7:36 PM GMT (Updated: 17 Feb 2021 7:52 PM GMT)

சாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக கூறி கண்ணீர் வடித்த இளம்பெண்ணை கட்டியணைத்த கனிமொழி எம்.பி. நம்பிக்கையூட்டும் வகையில் அந்த இளம்பெண்ணிடம் பேசினார்.

ஏரியூர்,

தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் ஏரியூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஏரியூர் அருந்ததியர் காலனியை சேர்ந்த அபிதா என்ற இளம்பெண் எல்லாவற்றிலும் சாதி பார்க்கப்படுகிறது. சாதி ரீதியாக எங்களை புறக்கணிக்கிறார்கள். உங்களை வரவேற்கும்போது ஆரத்தி எடுக்கவும் எங்களை அனுமதிக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். 

உடனடியாக கனிமொழி எம்.பி. அந்த இளம்பெண் இருந்த இடத்திற்கு சென்று அவரை கட்டி தழுவினார். நம்பிக்கையூட்டும் வகையில் அந்த இளம்பெண்ணிடம் பேசினார்.

அப்போது அந்த இளம்பெண் இந்த பகுதியில் எங்கள் சமூகத்தை சேர்ந்த யாரும் அரசு வேலையில் இல்லை. எனது தாயார் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு 4 பெண் பிள்ளைகள் உள்ள எங்கள் குடும்பத்தை காப்பாற்றினார். எங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

அப்போது பேசிய கனிமொழி எம்.பி. தி.மு.க. பெரியார் வழியில் நடக்கும் சாதி மறுப்பு இயக்கம். இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் சாதி பேதங்கள் பார்க்க மாட்டார்கள். பெரியாரின் கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இந்த சம்பவத்தால் கிராம சபை கூட்டம் நடைபெற்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story