சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதை காலம் தான் தீர்மானிக்கும் - நாமக்கல்லில் டி.டி.வி. தினகரன் பேச்சு


சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதை  காலம் தான் தீர்மானிக்கும் - நாமக்கல்லில் டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 18 Feb 2021 1:05 AM GMT (Updated: 2021-02-18T06:40:29+05:30)

சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதை காலம் தான் தீர்மானிக்கும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

நாமக்கல், 

அ.ம.மு.க. மாநில துணைத்தலைவர் அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு விழா நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற சட்டசபை தேர்தலில் நாம் தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர வேண்டும். தி.மு.க.வை என்றைக்கும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. 
4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லத்திற்கு வந்த சசிகலாவை, தாயை வரவேற்பது போல் நமது தொண்டர்கள் வரவேற்றதை தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள அனைவரும் ஆச்சரியத்தோடும், வியப்போடும் பார்த்தனர்.

டெல்டா மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் தான் அ.ம.மு.க.வுக்கு செல்வாக்கு உள்ளது என கூறியவர்களுக்கு பாடம் புகட்டும் விதத்தில் அது அமைந்திருந்தது. ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற உணர்வோடு திரண்டதாகவே அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். நம்மோடு இருக்கும் கூட்டம் காசுக்காக, பதவிக்காக இருக்கும் கூட்டம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

தமிழக அமைச்சர் ஒருவர் தி.மு.க.வால் கூட அ.தி.மு.க.வுக்கு தொந்தரவு இல்லை என்றும், அ.ம.மு.க.வால் தான் தொந்தரவு எனவும் கூறுகிறார். உண்மையில் தி.மு.க.வுக்கு 'பி' டீமாக சில அமைச்சர்கள் தான் செயல்படுகிறார்கள். தி.மு.க. ஒரு வேளை ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்பது தெரியாமல் அவ்வாறு செயல்படுகின்றனர். ஆனால் அ.ம.மு.க. தான் ஆட்சிக்கு வரும். 

சட்டமன்ற தேர்தலானது நாடாளுமன்ற தேர்தல் போல் அல்ல. அ.ம.மு.க. தான் மக்களின் தேர்வாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ‌.ம.மு.க. தான் வெற்றி, தோல்வியை தீர்மானித்தது. ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பிறகு நாம் யார் என்பதை எல்லோருக்கும் நிரூபிப்போம். ஆர்.கே.நகரை தமிழகம் முழுவதும் உருவாக்கி காட்டுவோம். 

ஒற்றுமையாக இருந்து வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதன் மூலம் அ.தி.மு.க.வை மீட்டெடுத்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். அ.தி.மு.க.வை மீட்டெடுப்பது சட்டசபை தேர்தலுக்கு முன்பா? அல்லது பின்பா? என்பதை காலம்தான் தீர்மானிக்கும். தொண்டர்கள் அனைவரும் தயாராக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவர்கள் சசிகலாவை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார்கள். எனவே அவர், ஓய்வு முடிந்த பிறகு வெளியில் வருவார். தி.மு.க. தான் எங்களுக்கு தீயசக்தி. அரசியல் எதிரி. அவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என அ.ம.மு.க. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, தேர்தலிலும் செயல்படுவோம். எங்களை மீறி அரசியலில் யாரும் எதையும் செய்துவிட முடியாது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது என்பது உண்மை தான். ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் அட்டூழியம் எல்லாவற்றிற்கும் தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள். அ.ம.மு.க. சார்பில் விருப்ப மனு வாங்கப்படும். நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்க மாட்டோம். வேட்பாளர்கள் யார் என்பது மாவட்ட, மண்டல பொறுப்பாளர்கள் மூலம் தீர்மானிக்கப்படும். தேர்வுக்கு மாணவன் எவ்வாறு தயாராகின்றானோ, அதேபோல் தேர்தலுக்கு அ.ம.மு.க. தொண்டர்கள் தயாராக இருக்கின்றார்கள். யார் முதல்-அமைச்சர்? என்பதை ஒரிரு கட்சிகள் முடிவு செய்ய முடியாது. மக்கள் தான் தீர்மானிப்பார்கள். சசிகலா அ.தி.மு.க.வை மீட்க ஜனநாயக முறையில் சட்டரீதியாக போராடி வருகிறார். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story