ஆயுதங்கள் கையாள்வது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி


ஆயுதங்கள் கையாள்வது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி
x
தினத்தந்தி 19 Feb 2021 3:21 AM GMT (Updated: 19 Feb 2021 3:21 AM GMT)

ஆயுதங்கள் கையாள்வது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி பயனுள்ள வகையில் இருப்பதாக அதிகாரிகள் தகவல்.

சென்னை, 

உலகிலேயே தலைசிறந்த ராணுவமாக திகழ்ந்து வரும் இந்திய ராணுவத்தின் போர் யுக்திகளை தெரிந்து கொள்வதில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் நட்பு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) கடந்த மாதம் 18-ந் தேதியில் இருந்து தொடர்ந்து ஆறு வார காலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாடுகளுக்கு இடையேயான பயிற்சி பரிமாற்றத்தின் மூலம் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இதில் உடல் ரீதியான பயிற்சி, ஆயுதத்தைக்கையாளுதல், தந்திரப்பயிற்சி, தலைமை பண்புக்கான பயிற்சி, மனிதவள மேம்பாட்டுக்கான பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுகிறது.

இதைத்தொடர்ந்து இந்திய கலாசாரத்தை தெரிந்து கொள்ளச்செய்யும் வகையில் பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் பெண் அதிகாரிகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக இங்கு பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி தங்களுக்கு புது அனுபவமாகவும், நவீன முறையில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள பெரிதும் பயனுடையதாகவும் இருக்கிறது என்று ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story