மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி
தாத்தா-பாட்டியுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வயது குழந்தை, மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திர ஆதவ். இந்திய கடலோர கப்பல் படையில் துணை கமாண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய 2 வயது மகள் ஆதிரா.
இவள், தனது தாத்தா ரங்கநாதன் (வயது 70), பாட்டி பரமேஸ்வரி (62) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் காட்டுப்பாக்கம், செந்தூர்புரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றாள்.
காட்டுப்பாக்கம், செந்தூர்புரம் மெயின்ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே சென்ற ஒருவர் மீது மோதாமல் இருக்க ரங்கநாதன், திடீரென மோட்டார்சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்தினார்.
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து இருந்த குழந்தை ஆதிரா, நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. எதிரே வந்த டிராக்டர், குழந்தை மீது ஏறி இறங்கியது. டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய குழந்தை ஆதிரா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாத்தா-பாட்டி இருவரும் அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஆதிராவை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஆதிரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தங்களது கண் எதிரேயே பலியான பேத்தி ஆதிராவின் உடலை பார்த்து ரங்கநாதன், பரமேஸ்வரி இருவரும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்பேட்டையை சேர்ந்தவர் குமரன். இவருடைய மகள் யோகிதா (3). நேற்று முன்தினம் மாலை ஆவடி அடுத்த மேல்பாக்கம் சிவன் கோவில் தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு குமரன் குடும்பத்துடன் வந்திருந்தார்.
சிவன் கோவில் அருகே அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை யோகிதா திடீரென சாலையின் குறுக்கே ஓடியது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தை யோகிதாவை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை யோகிதா பரிதாபமாக உயிரிழந்தது.
இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மேல்பாக்கம் வள்ளுவர் தெருவை சேர்ந்த கிளமென்ட் (22) என்பவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story