தொடர் மழையால் பாதிக்கப்பட்டு பதராகி விட்டதால் வைக்கோலுக்காக நெற்பயிரை அறுவடை செய்யும் விவசாயிகள்
திருக்கடையூர் பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு பதராகி விட்டதால் வைக்கோலுக்காக நெற்பயிரை விவசாயிகள் அறுவடை செய்கின்றனர். வைக்கோலை வியாபாரிகள் எந்திரம் மூலம் கட்டுகளாக கட்டி எடுத்து செல்கின்றனர்.
திருக்கடையூர்,
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்ததால் வாய்க்கால், ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் சென்றதால் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர். இதனால் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து இருந்ததால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. மழையில் இருந்து தப்பிய பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் முதல் 35 மூட்டைகள் வரை கிடைத்து வந்த நிலையில் தற்போது 5 மூட்டைகள் முதல் 10 மூட்டைகள் வரை தான் கிடைத்து வருகிறது. மேலும் நெல் பதராகி விட்டதால் ஒரு சில வயல்களில் வைக்கோலுக்காக நெற்பயிரை அறுவடை செய்கின்றனர். அவ்வாறு அறுவடை செய்து வயலில் கிடைக்கும் வைக்கோலை எந்திரங்கள் மூலம் கட்டுகளாக கட்டி விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
அறுவடை பணி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு பதராகி விட்டதால் வைக்கோலுக்காக நெற்பயிரை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் நெல்லை அறுவடை செய்த பிறகு வைக்கோலை வயலிலே விட்டு விடுவது வழக்கம்.
அடுத்த நெல் சாகுபடி பணி தொடங்கும் நேரத்தில் வயலில் கிடக்கும் வைக்கோலை ஆட்கள் கொண்டு அப்புறப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஆட்கள் கூலி உள்ளிட்ட கூடுதல் செலவும், நேர விரயமும் ஏற்படும். ஆனால் தற்போது அந்த நிலை மாறி நாமக்கல், விருத்தாசலம், சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வியாபாரிகள் தாங்கள் கொண்டுவரும் எந்திரம் மூலம் வைக்கோலை கட்டுகளாக கட்டி ஒரு கட்டு ரூ.20 விலை கொடுத்து எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் ஒரு ஏக்கருக்கு 50 முதல் 85 வரை கட்டுகள் கிடைக்கின்றன. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.900 முதல் ரூ.1,700 வரை கிடைப்பதாகவும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட மகசூல் பாதிப்பால் விவசாயிகள் மனமுடைந்த நிலையில் வைக்கோலை அப்புறப்படுத்த ஏற்படும் ஆட்கள் கூலி மிச்சமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story