திருவோணம் அருகே கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக கூறி விவசாயிகள் சாலை மறியல்
திருவோணம் அருகே கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வா.கொல்லைக்காடு கிராமத்தில் பூவாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கி மூலமாக இடையாத்தி, வா.கொல்லைக்காடு, பூவாளூர், நெய்விடுதி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் கூட்டுறவு வங்கியில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ள நிலையில், பூவாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிலம் இல்லாத நபர்களின் பெயர்களிலும் சிலர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் கடன் பெற்று லட்சக்கணக்கிலான தொகையை தள்ளுபடி எனும் பேரில் முறைகேடு செய்து விட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கோட்டை - கறம்பகுடி சாலையில் வா. கொல்லைக்காடு கூட்டுறவு வங்கி முன்பாக நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story