வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்


வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 22 Feb 2021 8:42 PM IST (Updated: 22 Feb 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் சினிமா நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

செங்குன்றம், 

சென்னையை அடுத்த புழல் சூரப்பட்டு சீனிவாசா நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் சினிமா நடிகை சமீரா (வயது 22).

இவர், புழல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் தஞ்சாவூர் அதிராமபட்டினம். திரைப்பட நடிகையான நான், ‘எதிரொலி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.

ஒரு படத்தில் நடிக்க வைப்பது தொடர்பாக எனக்கும், செங்குன்றத்தை அடுத்த கோடுவெளி பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக நான், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தேன். இந்த புகார் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது.

வீடு புகுந்து கொலை மிரட்டல்

இந்த நிலையில் கோவிந்தராஜிக்கு வேண்டப்பட்ட ஜெயக்குமார் என்பவர் நான் அளித்த புகாரை வாபஸ் வாங்கும்படி என்னை மிரட்டினார். இதற்கிடையில் கோவிந்தராஜின் தூண்டுதலின்பேரில் ஜெயக்குமார், நக்கீரன், பூர்ணிமா மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் நான் வீட்டில் இருந்த போது வீடு புகுந்து என்னை அடித்து உதைத்து ஆபாச வார்த்தைகளால் பேசியதுடன், என்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டினர். எனவே மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறி உள்ளார்.

அதன்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story