குடும்பத்தகராறில் கழுத்தை அறுத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மனைவி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


குடும்பத்தகராறில் கழுத்தை அறுத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மனைவி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Feb 2021 9:28 PM IST (Updated: 22 Feb 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறில் கழுத்தை அறுத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மனைவி பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி, 

பூந்தமல்லி சுமித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 30), மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு குன்றத்தூரை சேர்ந்த கீர்த்தனா (27). என்ற பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது.

அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்றத்தூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கீர்த்தனா சென்று விட்டார். சம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பதற்காக பன்னீர்செல்வம் குன்றத்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.

வீட்டின் மாடியில் நின்று கொண்டு கணவன், மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை சரமாரியாக அறுத்துவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

கொலை

ரத்தவெள்ளத்தில் அலறியபடி மயங்கிய கீர்த்தனாவை அவரது பெற்றோர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

குன்றத்தூர் போலீசார் கீர்த்தனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த நாள் முதல் பன்னீர்செல்வம் தலைமறைவாக உள்ளார் அதுமட்டுமின்றி தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து விட்டு சென்றுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக கணவனே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story