கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் பிணமாக மீட்பு தீயணைப்பு வீரர்கள் வர தாமதித்ததால் பொதுமக்கள் சாலை மறியல்


கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் பிணமாக மீட்பு தீயணைப்பு வீரர்கள் வர தாமதித்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2021 2:40 PM GMT (Updated: 23 Feb 2021 2:40 PM GMT)

வெங்கல் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் மாயமான நிலையில், நேற்று பிணமாக மீட்கப்பட்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே கரிக்கலாவாக்கம் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 4 பேருடன் ஆர்.ஆர்.கண்டிகை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்றார்.

குளித்து கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சென்ற மணிகண்டன் நீரில் மூழ்கியதில் அடித்து செல்லப்பட்டார். அவர் மட்டும் கரைக்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மணிகண்டனின் பெற்றோரிடம் சென்று தகவலை கூறினர். இதையடுத்து உடனடியாக திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு படை குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி மாயமான மணிகண்டன் உடலை தேடினர்.

நெடுநேரம் தேடி அவர் கிடைக்காததால் சோர்வடைந்த வீரர்கள் நேற்று காலை வந்து உடலை தேடுவதாக கூறிவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணி வரையில் தீயணைப்பு படை வீரர்கள் வராததால் ஆத்திரம் அடைந்த கிராம பொதுமக்கள் மற்றும் மணிகண்டனின் உறவினர்கள்100-க்கும் மேற்பட்டோர்ஆர்.ஆர்.கண்டிகை கிராமத்தில் திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதனால் நேற்று காலை சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பொதுமக்களை சமரசம் செய்தநிலையில், உடனடியாக திருவள்ளூர் மற்றும் திருவூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு மணிகண்டனின் உடலை தேடும் பணியை தொடங்கினர்

அதைத்தொடர்ந்து, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நேற்று காலை 11 மணி அளவில் அவரது உடல் மீட்கப்பட்டது. எனவே, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் குளிக்கச்சென்ற வாலிபர்களில் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story