கூட்ட நெரிசலை குறைக்க அலுவலக நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை
மெட்ரோ ரெயிலில் கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், அலுவலக நேரங்களில் கூட்டநெரிசலை தவிர்க்க கூடுதல் ரெயில்கள் இயக்குவதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் போதுமான வசதிகள் செய்து தர வேண்டும் என்று பெண் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
சென்னையில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் தினசரி 80 ஆயிரம் பயணிகள் வரை பயணம் செய்து வருகின்றனர். டோக்கன் மூலம் டிக்கெட் பெறும்போது அதிகபட்சமாக ரூ.70 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் பயணம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி நேற்று முதல் குறைக்கப்பட்ட கட்டணத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் வழக்கத்தை விட, நேற்று அனைத்து வழித்தடங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கட்டணம் குறைப்பு மற்றும் வசதிகள் குறித்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தவர்கள் பல்வேறு கருத்துகளை கூறினார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்
இதுகுறித்து சென்னை மருத்துவ கல்லூரி முன்னாள் கண்காணிப்பாளர் டாக்டர் சி.வேணி ஜெயசந்திரன் கூறியதாவது:-
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மார்க்கத்தில் மெட்ரோ ரெயில் வசதி வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்த என்னுடைய கணவர் மறைந்த டாக்டர் ஜெயசந்திரனின் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. அதேபோல் கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் வசிக்கும் இந்த பகுதியில் அனைவரும் இந்த ரெயிலை பயன்படுத்த வேண்டும் என்பதால் கட்டணம் குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை ஏற்று தமிழக அரசு கட்டணத்தை குறைத்து உள்ளது. அதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை உள்ள ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய வசதிகளை முறையாக செய்து தர வேண்டும். பயணிகள் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு உள்ள திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலைய பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்
சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் வக்கீல் ஆர்.சுதா ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
பயணிகள் மெட்ரோ ரெயிலை வசதியான பயணமாக கருதவில்லை, செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடிகிறது என்பதை தான் பார்க்கின்றனர். அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் மெட்ரோ ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாகவும், சவுகர்யமானதாகவும் இருப்பதாக உணருகின்றனர். கொரோனாவுக்கு முன்பு இருந்த பொருளாதார நிலை வேறு தற்போது இருக்கும் பொருளாதார நிலை வேறு, எனவே தற்போது இருக்கும் கட்டணமே பெரிதாக தான் தெரிகிறது. எனவே மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் மேலும் கட்டணத்தை குறைப்பது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அலுவலக நேரங்களில் கூடுதல் ரெயில்
தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் கழகம் பொதுச்செயலாளர் டி.ஜெயந்தி கூறியதாவது:-
வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகளவில் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துகின்றனர். இவர்கள் பயண அட்டை மற்றும் கியூஆர் குறியீடு முறைகளை பயன்படுத்தி டிக்கெட்டுகளை பெற்று உள்ளனர். இருந்தாலும் டோக்கன் முறையில் பெறும் டிக்கெட்களுக்கு கட்டணம் குறைப்பு வரவேற்கதக்கது. கட்டணம் குறைக்கப்பட்டதால் அலுவலக நேரங்களில் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே விமானநிலையத்தில் இருந்து அண்ணாசாலை வழியாக வண்ணாரப்பேட்டைக்கு அதிக மெட்ரோ ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஸ் கட்டணத்தை விட குறைவு
திருநங்கைகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.சுதா கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் நிறுவனம் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளித்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வண்ணாரப்பேட்டை விம்கோ நகரில் இருந்து விமானநிலையத்திற்கு விரைவாக செல்ல முடிவதால் தற்போது சென்னை மாநகரமே கைக்குள் அடங்கி விடுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான பயணமாக கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது ஒரு சில வழித்தடங்களில் பஸ் கட்டணத்தை விட குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக சென்னை எழும்பூரில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வெறும் ரூ.15 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தில் அரசு டீலக்ஸ் பஸ்களில் பயணம் செய்ய முடியாது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு சில வழித்தடங்களில் அரசு பஸ்களை விட மெட்ரோ ரெயிலே சிறந்ததாக தெரிகிறது. கட்டணம் குறைப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story