பிரதமர் மோடி கோவை வருகை


சிறப்பான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது
x
சிறப்பான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது
தினத்தந்தி 24 Feb 2021 8:47 PM GMT (Updated: 24 Feb 2021 8:54 PM GMT)

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது

கோவை,

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது
 தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது பிரசாரத்தை தொடங்கி விட்டனர். பா.ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரிகளும் தமிழகத்தில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் பிரதமர் நரேந்திரமோடி இன்று (வியாழக்கிழமை) கோவை வருகிறார். 

இதற்காக காலை 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படும் மோடி, காலை 10.25 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்.

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் பகல் 2.10 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 3.35 மணிக்கு கோவை விமானநிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு அவருக்கு பா.ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

அதன்பின்னர் கார் மூலம் கொடிசியா அரங்கிற்கு செல்கிறார். அங்கு பிரதமர் கலந்துகொள்ளும் திட்ட தொடக்க நிகழ்ச்சிக்காக சிறப்பான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

அங்கு ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார்.

இது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள 2 மின் உற்பத்தி அலகுகளும் தலா 500 மெகா வாட் திறன் உள்ளது. 

ரூ.8 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்து வைக்கிறார். 

இந்த திட்டம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது

இதேபோல கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதோடு, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரெயில்வே பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இதற்கு சாகர்மாலா திட்டம் மூலம் நிதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.20 கோடி செலவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின் சக்தி தொகுப்புக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1,280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1,248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 

கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்பட 9 'ஸ்மார்ட்' நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை 5 மணியளவில் காரில் கொடிசியா அரங்குக்கு அருகில் உள்ள மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு பாரதீய ஜனதா சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை விமானநிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொடிசியா அரங்கு மற்றும் கொடிசியா மைதானம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மோடியின் வருகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 17 போலீஸ் சூப்பிரண்டுகள், 38 கூடுதல் சூப்பிரண்டுகள், 48 துணை சூப்பிரண்டுகள் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர கொடிசியா நுழைவு வாயில் முன்பு தற்காலிக கட்டுப்பாட்டு அறையை போலீசார் அமைத்துள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

பிரதமரின் பாதுகாப்புக்கு வந்துள்ள அனைத்து போலீசாரும் தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்துள்ளனர்.

பிரதமரின் பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் (எஸ்.பி.ஜி.) 30 பேர் கோவை வந்துள்ளனர். 

அவர்களுடன் பிரதமர் மோடி பயணிப்பதற்காக குண்டு துளைக்காத 4 கார்களும் அரசு விருந்தினர் மாளிகையில் நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளன. மேலும் மேடைக்கு முன்பும் கீழ் பகுதியில் உள்ள தரைப்பகுதியில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

 பொதுக்கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் செல்வதற்கு தனி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 

அங்கு 20-க்கும் மேற்பட்ட மெட்டர் டிடெக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக வரும் பொதுமக்கள் அனைவரும் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் 2 இடங்கள் உள்ள கொடிசியா பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Next Story