காவேரிப்பாக்கத்தில் ரூ.5 லட்சம் கேட்டு டெய்லர் கடத்தல் - தம்பி உள்பட 3 பேர் கைது
காவேரிப்பாக்கத்தில் ரூ.5 லட்சம் கேட்டு டெய்லரை கடத்திய தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்,
காவேரிப்பாக்கம் கம்மாளர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வெங்கடேசன் (45) டெய்லர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி செல்வக்குமார் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ஆறுமுகத்திற்கு சொந்தமான நிலத்தை வெங்கடேசன் மகனுக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் அவரது நண்பர்கள் விக்னேஷ் (34), தாமோதரன் (24) ஆகியோர் வெங்கடேசனை அழைத்துச் சென்று வாலாஜா அடுத்த முசிறியில் மிரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
இதனையெடுத்து வெங்கடேசன் அவரது மனைவி சரளாவுக்கு போன்செய்து, ரூ.5 லட்சம் கேட்டு தன்னை அடித்து உதைப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரளா காவேரிபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வெங்கடேசன் மீட்டனர். செல்வகுமார், விக்னேஷ், தாமோதரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.