திருவெண்காடு அருகே பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த பட்டதாரி பெண் கொலை
திருவெண்காடு அருகே வீட்டில் தனியாக இருந்த பட்டதாரி பெண் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவெண்காடு,
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்டம் பீச் தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் மகள் கலையழகி(வயது 26). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பெருந்தோட்டத்திற்கு வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது தாயார் தமிழ்ச்செல்வி, உறவினர் திருமணத்திற்காக வைத்தீஸ்வரன் கோவில் சென்று விட்டார்.
கொலை
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை தமிழ்ச்செல்வி தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்து போனார். வீட்டில் தனது மகள் கலையழகி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.
அவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போதுதான் வீட்டில் தனியாக இருந்த கலையழகியை மர்ம நபர்கள் கொலை செய்தது தெரிய வந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவப்பிரியா, திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, அழகேந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆதவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கலையழகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கலையழகியை கொலை செய்தவர்கள் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரபரப்பு
வீட்டில் தனியாக இருந்த பட்டதாரி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story