காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு தேர்தல் நடந்தாலும் திட்டப்பணிகள் தொடரும் கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரி தகவல்


காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு  தேர்தல் நடந்தாலும் திட்டப்பணிகள் தொடரும்  கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2021 12:48 AM IST (Updated: 27 Feb 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை:
கருத்து கேட்பு கூட்டம்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில், ``காவிரி ஆற்றுப்படுகையிலிருந்து வெள்ளம் ஏற்படும் காலகட்டங்களில் பற்றாகுறையுள்ள ஆற்றுப்படுகைகளுக்கு உபரி நீரை குண்டாறு நதிவரை அனுப்பி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பயன்படும் வகையில் வெள்ள நீருக்கான கால்வாய் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தினால் புதுக்கோட்டை, விராலிமலை மற்றும் குளத்தூர் தாலுகாகளில் அமைந்துள்ள 19 கிராமங்களில் மொத்தம் 18,500 எக்டேர் பரப்பளவில் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்'' என்றார்.
கால்வாய் 
கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதன்பின் பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்புக் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்வம் பதில் அளித்து பேசியதாவது:-  இந்த கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்த திட்டத்தில் தங்களது நிலம், வீடுகள் பாதிக்கப்படாத வகையில் மாற்றுவழியில் நிறைவேற்ற வேண்டும் என கூறினீர்கள். இந்த திட்டத்தை பொறுத்தவரை தண்ணீர் வாட்டமாக செல்லும் பகுதியை கணக்கில் கொண்டு தான் திட்டமிடப்பட்டுள்ளது. கால்வாய் வெட்டப்படும் இடங்கள் அதுபோல் இருந்தால் தண்ணீர் செல்ல வசதியாக இருக்கும். நிலம் கையகப்படுத்துதில் விவசாய நிலம், வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
பணிகள் தொடர்ந்து நடைபெறும்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இத்திட்டம் கைவிடப்படுமா? என ஒருவர் கேட்டுள்ளீர்கள். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்து நடந்தாலும் இத்திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். இந்த பணிகள் நிறுத்தப்படாது. கால்வாய் வெட்டப்படும் போது எடுக்கப்படும் மண் வெளியில் எங்கும் கொண்டு செல்லப்படாது. அதனை கொண்டு கரைகள் அமைக்க பயன்படுத்தப்படும். சில இடங்களில் பாறைகள் உள்ளது. அவையும் உடைத்து தோண்டப்படும் போது வேறு இடத்தில் பயன்படுத்தப்படும்.  இதனை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும். இந்த திட்ட கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியுமா? என பலர் கேட்கிறீர்கள். எதிர்காலத்தில் இந்த கால்வாயில் இருந்து குழாய் மூலம் அருகில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
வீட்டுமனைகள்
அதேபோல இத்திட்டம் நிறைவேற்றப்படுகிற இடங்களில் வரத்து வாரிகள் இருந்தால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் பேசுகையில், `இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடிய இடங்களில் பட்டாக்கள் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள். வீடு, நிலம் பாதிக்கப்படுகிறவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வீட்டுமனைகள் வழங்கப்படும்' என்றார்.
கோரிக்கை மனுக்கள்
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கீதா, உதவி செயற்பொறியாளர் உமாசங்கர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்பட பலர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் நன்றி கூறினார். கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் சிலர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் 100 ஆண்டு கால திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு நன்றி தெரிவித்து பேசினர்.

Next Story