அந்தியூர், சத்தியமங்கலம், கோபியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்- அனைத்து கட்சியினர் பங்கேற்பு
அந்தியூர், சத்தியமங்கலம், கோபியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கூட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
அந்தியூர், சத்தியமங்கலம், கோபியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கூட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.
1,000 வாக்காளர்களுக்கு...
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதுசம்பந்தமான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோ தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தேர்தல் நடைமுறைகளை கட்சியினர் எவ்வாறு பின்பற்றுவது? என்பது குறித்தும், 1,000 வாக்காளர்கள் இருந்தால் அவற்றுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
கடும் நடவடிக்கை
மேலும் வாக்களிக்கும்போது அனைவரும் முக கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் அருகில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது. சாதி, மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து அரசியல் கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி வீரலட்சுமி, பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் வருவாய் அதிகாரி உமா சங்கர், கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம், அ.தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஜி.சண்முகானந்தம், அவைத்தலைவர் வளர்மதி தேவராஜ், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், ஈரோடு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன், இளைஞர் அணி சார்பில் வேலுச்சாமி, தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்
இதேபோல் சத்தியமங்கலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பவானிசாகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசியதா வது:-
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளுக்கு உள்பட்டு பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரம் நடத்த வேண்டும். கூட்டமாகச் சென்று வாக்கு சேகரிப்பதை தவிர்த்தல் வேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது. வாக்குக்கு யாராவது பணம் கொடுத்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம். பிரசாரத்துக்கு வரும் பேச்சாளர்கள் ரூ.1லட்சத்துக்கு அதிகமாக பணம் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகனத்தில் அழைத்து வரக்கூடாது
மேலும் மலைப்பகுதியில் உள்ள வாக்காளர்களை அரசியல் கட்சியினர் தனி வாகனத்தில் அழைத்து வரக்கூடாது. வாக்கு சேகரிப்பின் போது பிரியாணி, இட்லி போன்ற உணவுகளை கொடுத்தால் அந்த செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் கூறினார்.
கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசங்கர், சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, அ.தி.மு.க. சார்பில் ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் எஸ்.ஆர்.பி. வெங்கிடுசாமி, தி.மு.க. சார்பில் சத்தியமங்கலம் பொறுப்புக் குழு உறுப்பினர் கே.ஆர்.சபியுல்லா, காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர தலைவர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஸ்டாலின் சிவக்குமார், தே.மு.தி.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கோபி
கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோபி ஆர்.டி.ஓ.வும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பழனிதேவி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறின்றி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். சுவரில் விளம்பரங்கள் செய்ய வீட்டு உரிமையாளர்களின் அனுமதி கடிதம் பெற வேண்டும். மேலும் கொடிக்கம்பங்கள் அகற்றுதல், அரசியல் கட்சி பெயர் பலகைகளை அகற்றுதல் போன்றவற்றை அந்தந்த கட்சியினர் மேற்கொள்ள வேண்டும். வாக்கு சேகரிக்க செல்லும் போது 5 நபர்கள் மட்டுமே உடன் செல்ல வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமண மண்டப உரிமையாளர்
அதைத்தொடர்ந்து திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்றது. அனுமதியின்றி திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதிகளில் அரசியல் கூட்டங்கள் நடத்தக் கூடாது. வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் விடுதியில் தங்கினால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story