பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீதான பாலியல் தொல்லைக்கு கண்டனம்: தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு


பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீதான பாலியல் தொல்லைக்கு கண்டனம்: தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 1 March 2021 5:17 AM GMT (Updated: 1 March 2021 5:17 AM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீதான பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு காருக்குள் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி செயலாளருமான புரவலர் இந்திரகுமாரி முன்னிலை வகித்தார். மகளிரணி நிர்வாகிகள் கவிஞர் சல்மா, சிம்லா முத்துசோழன், தமிழரசி மற்றும் மாவட்டச் செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

பணி இடைநீக்கம்

பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது வழக்கு விசாரணையில் உள்ளது. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர் காத்திருப்பு பட்டியல் வைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவரை பணி இடைநீக்கமோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. இப்படி பதவி அதிகாரத்தின் மீது இருக்கக்கூடிய ஒருவர் மீது விசாரணை நடத்தும்போது நிச்சயமாக அவர்கள் சாட்சிகளை சொல்ல வருபவர்களை தடுத்து நிறுத்தி விடுவார்கள். ஏற்கனவே புகார் கொடுக்க வந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை எஸ்.பி.கண்ணன் தடுத்து நிறுத்தியுள்ளார். இவர் பதவியில் இருக்கின்ற காரணத்தினால் விசாரணை நியாயமாக நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

இதனால் குற்றம் சுமத்தப்பட்ட இருவரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். மேலும் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி வந்தவுடன் பெண்கள் மீதான பாலியல் புகாருக்கு என தனி விசாரணை கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் வெற்றி நடை போடவில்லை வெற்று நடைபோடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story