தி.மு.க. பிரமுகர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


தி.மு.க. பிரமுகர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 1 March 2021 7:54 PM GMT (Updated: 1 March 2021 7:54 PM GMT)

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என நெல்லை போலீஸ் சூப்பிரண்டிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

நெல்லை, மார்ச்:
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று நெல்லை போலீஸ் சூப்பிரண்டிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

தி.மு.க. பிரமுகர் கொலை

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

இந்த நிலையில் செல்லத்துரையின் மனைவி பிரேமா, தாய் முத்துலட்சுமி, சகோதரர் கந்தசாமி, தி.மு.க. வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வக்குமார், வக்கீல்கள் அரவிந்த், சிவசுப்பிரமணியன் மற்றும் கிராம மக்கள் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

கைது நடவடிக்கை

செல்லத்துரைக்கும், அந்த ஊரை சேர்ந்தவர்களுக்கும் இடையே பஞ்சாயத்து தலைவர் பதவி, கைலாசநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர், கூட்டுறவு வங்கி தலைவர் பதவிகள் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதையொட்டி அவரை வெட்டிக் கொலை செய்து விட்டனர். இதில் ஒருவரை மட்டுமே கைது செய்து உள்ளனர்.

ஆனால் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள எங்கள் ஊரை சேர்ந்த மேலும்  5 பேரை இதுவரை கைது செய்யவில்லை. இதில் போலீசார் மெத்தனமாக செயல்படுகின்றனர். இதில் அரசியல் தலையீடு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செல்லத்துரையின் மனைவி பிரேமா கூறுகையில், ‘‘என்னுடைய கணவர் கொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும். இதில் அரசியல் தலையீடு காரணமாக போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம்’’ என்றார்.

Next Story