அந்தியூர் அருகே தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல்- போக்குவரத்து பாதிப்பு


அந்தியூர் அருகே தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல்- போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 March 2021 6:17 AM IST (Updated: 2 March 2021 6:17 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

அந்தியூர்
அந்தியூர் அருகே தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
தாக்குதல்
அந்தியூர் அருகே உள்ள தாசரியூரை சேர்ந்தவர் சிவா (வயது 22). செங்கல் சூளை தொழிலாளி.
கடந்த 25-ந் தேதி சிவாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவருடைய தாயார் ஈஸ்வரி, அண்ணன் தினேஷ் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சிவாவை வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள். 
அப்போது முன்விரோதம் காரணமாக அந்தியூர் அருகே உள்ள பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ், சக்திவேல், புலிமன்னன் உள்பட 13 பேர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சிவாவை தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதில் மேலும் படுகாயம் அடைந்த சிவாவை உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலைமறியல்
இந்தநிலையில் சிவாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 300 பேர் நேற்று மதியம் 12 மணி அளவில் தாசரியூர் பஸ்நிறுத்தம் அருகே ஒன்று கூடினார்கள். பின்னர் சிவாவை தாக்கியவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. 
இதுபற்றி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, வருவாய் ஆய்வாளர் உமா, அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
2 மணி நேரம்
அப்போது சிவாவை தாக்கியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்தார்கள். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள். எனினும் இந்த சாலைமறியல் போராட்டத்தால் அந்தியூர்-கோபி ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story