தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; போலீஸ்காரர் பலி
தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர், மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 26). இவர், சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர், தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
வெங்கடேசன், நேற்று காஞ்சீபுரத்தில் இருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தென்னேரி கூட்ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது இவரது மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய போலீஸ்காரர் வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பலியான போலீஸ்காரர் வெங்கடேசன், 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு வாலாஜாபாத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story