கண்டமங்கலம், அனந்தபுரம் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.8 லட்சம் பறிமுதல்-பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


கண்டமங்கலம், அனந்தபுரம் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.8 லட்சம் பறிமுதல்-பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 March 2021 5:15 PM GMT (Updated: 3 March 2021 5:15 PM GMT)

கண்டமங்கலம், அனந்தபுரம் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த கலித்திராம்பட்டு கூட்டுசாலை அருகில் வானூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் முருகன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீஸ்காரர்கள் செல்வக்குமார், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.7 லட்சம் பறிமுதல்

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவரை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் விழுப்புரம் பூந்தமல்லி தெருவை சேர்ந்த முத்து (வயது 65) என்பது தெரியவந்தது. மேலும் அவர், பைனான்ஸ் கொடுப்பதற்காக பணத்தை கொண்டு செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் ஏதும் முத்துவிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.7 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை வானூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகமான வானூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் ரூ.1 லட்சம் சிக்கியது

இதேபோல் அனந்தபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒட்டம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தண்டபாணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் இருந்த ஒரு பையில் ரூ.99 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (51) என்பது தெரிந்தது. அவர், இந்த பணத்தை திருவெண்ணெய்நல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்காக கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்குரிய உரிய ஆவணம் ஏதும் பாலமுருகனிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் செஞ்சி தாசில்தாருமான ராஜனிடம் ஒப்படைத்தனர். அப்போது தேர்தல் துணை தாசில்தார் துரை செல்வன், தேர்தல் வருவாய் ஆய்வாளர் ராம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story