ஈரோடு பி.பி.அக்ரஹாரம் மாரியம்மன்-காளியம்மன் கோவில் குண்டம் விழா; திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்


ஈரோடு பி.பி.அக்ரஹாரம் மாரியம்மன்-காளியம்மன் கோவில் குண்டம் விழா; திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 3 March 2021 8:24 PM GMT (Updated: 3 March 2021 8:24 PM GMT)

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் மாரியம்மன்-காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.

ஈரோடு
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் மாரியம்மன்-காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.
குண்டம் விழா
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூச்சாட்டப்பட்டது.
கடந்த 1-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். 2-ந்தேதி காலை 7 மணிக்கு வேல் திருவீதி உலா நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், குண்டம் திறப்பு, இரவு 8 மணிக்கு பண்டார கரகம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சியும் நடந்தது.
தீ மிதித்து வழிபாடு
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கோவில் தர்மகர்த்தா சங்கரலிங்கம், பூசாரி கிருஷ்ணன் ஆகியோர் குண்டம் இறங்கினர். அவர்களை தொடர்ந்து திரளான பக்தர்கள் தீ மிதித்தனர். சிலர் அலகு குத்தியும், கைக்குழந்தைகளுடனும் குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பின்னர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு அம்மை அழைத்தல், மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 10 மணிக்கு காவு பூஜையும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Next Story