‘சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்’


‘சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்’
x
தினத்தந்தி 7 March 2021 5:40 PM GMT (Updated: 2021-03-07T23:35:07+05:30)

குன்னூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காததால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க காலேஜ் ரோடு பகுதி மக்கள் முடிவு செய்து உள்ளனர்.

குன்னூர்

குன்னூர் நகராட்சி 14-வது வார்டில் காலேஜ் ரோடு பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் தெருவிளக்கு உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளும் சரிவர இல்லை.

இதனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குன்னூர் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இதை கண்டித்து வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க காலேஜ் ரோடு பகுதி மக்கள் முடிவு செய்து உள்ளனர்.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- நாங்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை முறைப்படி செலுத்தி வருகிறோம். ஆனால் அடிப்படை வசதிகள் இதுவரை சரிவர மேம்படுத்தப்படவில்லை. குறிப்பாக சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது. 

இதை சீரமைக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதோடு வீடுகளில் கருப்பு கொடி கட்ட முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story