கொளத்தூர் அருகே விவசாய நிலத்தில் புதையல் கண்டெடுப்பு? கிராம மக்களிடையே பரபரப்பு; போலீசார் விசாரணை

கொளத்தூர் அருகே விவசாய நிலத்தில் புதையல் கண்டெடுப்பு? கிராம மக்களிடையே பரபரப்பு; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 March 2021 10:13 PM GMT (Updated: 7 March 2021 10:13 PM GMT)

கொளத்தூர் அருகே விவசாய நிலத்தில் புதையல் கண்டெடுக்கப்பட்டதாக கிராம மக்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொளத்தூர்:
கொளத்தூர் அருகே விவசாய நிலத்தில் புதையல் கண்டெடுக்கப்பட்டதாக கிராம மக்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாய நிலத்தில் புதையல்?
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தின்னப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்கரட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் குருசாமி (வயது 60), விவசாயி. ேநற்று முன்தினம் நள்ளிரவில் இவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து சுமார் 9 அங்குலம் நீளமுள்ள தங்கத்தால் ஆன சாமி சிலையும், தங்க காசுகள் அடங்கிய ஒரு பானையும் புதையலாக கண்டெடுக்கப்பட்டதாக கிராம மக்களிடையே திடீரென பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று மேட்டூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது குருசாமியின் விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பூஜைகள் நடத்தப்பட்டு, அந்த குறிப்பிட்ட இடத்தில் நிலம் தோண்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. 
போலீசார் விசாரணை
இதையடுத்து கொளத்தூர் போலீசார் குருசாமியிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனது குடும்ப நலனுக்காக தனது தோட்டத்தில் பூஜை நடத்தியதாகவும், புதையலுக்காக எந்த பூஜையும் செய்யவில்லை எனவும் குருசாமி தெரிவித்தார். 
விவசாய நிலத்தில் புதையல் கண்டெடுக்கப்பட்டதா? அல்லது வெறும் புரளியா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story