அவினாசி அருகே கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு


அவினாசி அருகே கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 7 March 2021 10:51 PM GMT (Updated: 7 March 2021 10:51 PM GMT)

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

அவினாசி
அவினாசி பகுதி கோதபாளையம், வன்னத்தங்கரை, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் காட்டு பகுதியில் இருந்து மான்கள்  உணவு தேடியும், தண்ணீருக்காகவும் அவினாசி நகர பகுதிக்கு வருகின்றன. அவ்வாறு வரும் வேளையில் வாகனங்களில் அடிபட்டும், தெரு நாய்கள் துரத்தி கடிப்பதாலும் மான்கள் இறக்க நேரிடுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தண்ணீருக்காக மான்கள் வெளியில் நடமாட்டம் உள்ளது. 
அவ்வாறு நேற்றுமுன்தினம் காட்டு பகுதியில் இருந்து 3 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மான் அவினாசி அருகே காசிகவுண்டன் புதூர் பகுதியில் வந்தபோது அப்பகுதியை சேர்ந்த தெரு நாய்கள் துரத்தின. மான் தப்பி ஓடியபோது காசிகவுண்டன்புதூர் கருப்பராயன் கோவில் தோட்டத்தில் இருந்த 80 அடி ஆழம் 40 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் கிணற்றில் தத்தளித்துக்கொண்டு இருந்த மானை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அடர்ந்த காட்டு பகுதியில் விடப்பட்டது. 

Next Story