தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 7 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்


கொஞ்சி அடைக்கான்; சித்ரா
x
கொஞ்சி அடைக்கான்; சித்ரா
தினத்தந்தி 8 March 2021 6:07 AM GMT (Updated: 8 March 2021 6:07 AM GMT)

படப்பை அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

தனியார் நிறுவன ஊழியர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா பொன்னையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொஞ்சி அடைக்கான் (வயது 40). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.2015-ம் ஆண்டு கொஞ்சி அடைக்கானுக்கு புதுக்கோட்டையை சேர்ந்த பழனியம்மாள் (34) என்பவருடன் திருமணம் ஆனது. தனது மனைவியுடன் காஞ்சீபுரம் ஜெம்நகரில் வாடகை வீட்டில் குடியேறினார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்தநிலையில் 3-8-2019-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற தனது கணவர் மாயமாகி விட்டதாக பழனியம்மாள், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கொடூர கொலை
இது தொடர்பாக கொஞ்சி அடைக்கானின் அண்ணியான சித்ரா(47) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கொஞ்சிஅடைக்கானை கொடூரமாக கொலை செய்து, அவரது கால்களை கட்டி, பீப்பாய்க்குள் அடைத்து அதற்கு மேல் ஜல்லி காங்கிரீட் நிரப்பி, கிணற்றில் வீசியது தெரிந்தது. 1½ ஆண்டுகளுக்கு பிறகு கிணற்றில் வீசப்பட்ட கொஞ்சி அடைக்கான் உடலை போலீசார் மீட்டனர்.இது தொடர்பாக போலீசார், சித்ரா, எழுமலை, (35), ரஞ்சித்குமார் (30), டார்ஜன் (33), விவேகானந்தன் (30), படப்பை சாலமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ் (28), வேளச்சேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (33), ஆகிய 7 பேரை கைது செய்தனர்.கைதான சித்ராவிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு
திருமணத்துக்கு முன்பு கொஞ்சிஅடைக்கான், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சுபத்ரா நகரில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார். தன்னுடைய பெரியம்மாவின் மகனான அதே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு கொஞ்சி அடைக்கான் (50) மற்றும் அவருடைய மனைவி சித்ரா, அவர்களது 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோரை 2009-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.அப்போது கொஞ்சி அடைக்கானுக்கும், தனது அண்ணியான சித்ராவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்ராவுக்கும், அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர், சித்ராவை விட்டு பிரிந்து தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

தகராறு
இதற்கிடையில்தான் கொஞ்சிஅடைக்கான், பழனியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த சித்ரா, தன்னுடன் இதுவரை குடும்பம் நடத்தி வந்த கொழுந்தன் கொஞ்சிஅடைக்கான், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்தார். திருமணம் முடிந்து தனது மனைவியுடன், ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த கொஞ்சிஅடைக்கானுடன் இது தொடர்பாக சித்ரா தகராறு செய்தார். அதன்பிறகே அவர், தனது மனைவியுடன் காஞ்சீபுரத்தில் குடியேறினார்.இதற்கிடையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது வீட்டை கொஞ்சிஅடைக்கான் விற்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஏற்கனவே தன்னுடன் வாழ்ந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த சித்ராவுக்கு, தற்போது தான் குடியிருக்கும் வீட்டையும் கொஞ்சிஅடைக்கான் விற்க முயற்சி செய்தது அவருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கொஞ்சிஅடைக்கானை கொலை செய்ய அவர் திட்டமிட்டார்.

வீட்டை அபகரிக்க
அதன்படியே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொஞ்சிஅடைக்கானை கொடூரமாக கொன்றுவிட்டு, அவரது உடலை பீப்பாயில் அடைத்து, சிமெண்டு கலவையால் மூடி கிணற்றில் வீசி உள்ளார். பின்னர் எதுவும் தெரியாததுபோல் இருந்து விட்டார்.இதற்கிடையில் கொஞ்சி அடைக்கானின் புதுக்கோட்டையில் உள்ள வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளதாக பழனியம்மாளின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதை வைத்து விசாரிக்கும்போதுதான் சித்ரா, கொஞ்சி அடைக்கான் பெயரில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரூ.1½ கோடி மதிப்புள்ள வீட்டை அபகரிக்க இந்த கொலையை செய்தது 1½ ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story