திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி


திருப்பூர் மாவட்டத்தில்  இதுவரை 15 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 8 March 2021 4:55 PM GMT (Updated: 2021-03-08T22:25:49+05:30)

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் பெண்களும், 40 சதவீதம் ஆண்களும் அடங்குவார்கள்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் பெண்களும், 40 சதவீதம் ஆண்களும் அடங்குவார்கள்.
கொரோனா தடுப்பூசி 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வந்தது. இந்த பாதிப்பு பல நாடுகளில் இருந்தது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு விதித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தன. இதன் காரணமாக கொரோனா தொற்றின் பாதிப்பு குறைய தொடங்கியது. இன்னமும் முழுவதும் பாதிப்பு குறையவில்லை.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் செலுத்தப்பட்டது. இதில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றவர்களுக்கு செலுத்தப்பட்டது.
முதியவர்கள் உற்சாகம் 
இதன் பின்னர் வருவாய்த்துறையினர், போலீசார் போன்றவர்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வந்தது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 வயது முதல் 65 வயது வரை நீரிழிவு நோய் உள்ளிட்ட இணைநோய் உள்ளவா்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்வந்து கொண்டிருக்கிறாா்கள். முதியவா்கள் பலரும் உற்சாகமாக வந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். அரசு வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
15,700 பேருக்கு தடுப்பூசி 
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
 திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, அவினாசி அரசு மருத்துவமனை உள்பட மாவட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகளிலும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் 13, ஆரம்ப சுகாதார நிலையம்-2  என 24 இடங்களில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுபோல் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள 24 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டு, அங்கும் பலர் கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் பெண்களும், 40 சதவீதம் ஆண்களும் அடங்குவர். இன்னமும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே அருகில் உள்ள சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். செல்லும் போது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story