மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 8 March 2021 6:20 PM GMT (Updated: 2021-03-08T23:50:43+05:30)

மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க கோரி கரூர் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர்
புகார் பெட்டி
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மாட்டுவண்டி தொழிலாளர்கள்
கரூர் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் 40 வருடங்களாக அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் மணல் எடுத்து சுமார் 1000 குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த 1 வருட காலமாக உள்ளூர் நிர்வாகம் மணல் எடுக்க தடைவிதித்துள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்து சிரமத்தில் உள்ளது. மாட்டுவண்டியில் எடுக்கப்படும் மணலுக்காக வண்டி ஒன்றிக்கு ரூ.63 அரசுக்கு செலுத்தி மாட்டுவண்டி ஒன்றிக்கு சுமார் 15 கன அடி மணல் மட்டுமே எடுத்து கரூரில் உள்ள கிராம மக்களுக்கு விற்பனை செய்து வந்தோம். எல்லா நாட்களிலும் ஒவ்வொரு மாட்டு வண்டியும் மணல் அள்ள வாய்ப்புகள் கிடைக்காது. இதனால் எங்கள் குடும்பதாருக்கும், கால்நடைகளுக்கும் உணவு தரமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்களுடைய ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டும், நாங்கள் மணல் எடுப்பதினால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி வருவாய் கிராமத்திற்குள் தேவையான மணலை விவசாயத்திற்கும், உள்ளூர் கட்டுமான பணிகளுக்காகவும் மணல் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறக்க வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூரில் உள்ள ஒரு தனியார் வங்கி கிளையில் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை அடமானமாக வைத்து விவசாய கடன்கள் வாங்கியுள்ளனர். தற்சமயம் கொரோனா பாதிப்பு மற்றும் பருவம் மாறி பெய்த கனமழை போன்றவற்றால் பல விவசாயிகள் தாங்கள் பெற்ற கடன்களை சரியாக செலுத்த இயலவில்லை. ஆனால் வங்கி நிர்வாகம் கடன்பெற்ற விவசாயிகளின் வீடுகளுக்கு குண்டர்களை அனுப்பி விவசாயிகளை தகாத வார்த்தைகளில் பேசுவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. மேற்படி வங்கியானது கடன் வழங்குவது, கடனை வசூல் செய்வதில் ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. தனியார் வங்கியால் பல விவசாயிகள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். ஆகையால் அந்த தனியார் வங்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story