திருவலம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி


திருவலம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி
x
தினத்தந்தி 9 March 2021 4:48 AM GMT (Updated: 2021-03-09T10:18:36+05:30)

திருவலம் அருகே பெண்ணுக்கு வரன் பார்த்து விட்டு திரும்பியபோது சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண்ணின் தாயார் உட்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

வரன் பார்க்கசென்றனர் 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரதராமி வி.டி. பாளையத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் மகளுக்கு வரன் பார்ப்பதற்காக நேற்று முன்தினம், ராணிப்பேட்டை காரை பகுதிக்கு சரக்கு ஆட்டோ ஒன்றில் சென்றனர். அங்கு வரன்பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பினர்.

சென்னை-சித்தூர் சாலையில் திருவலம் இ.பி. கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து, ஆட்டோ கவிழ்ந்தது. 

3 பெண்கள் பலி

இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற 29 பேரில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் வாலாஜா மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி பெண்ணின் தாயார் பரதராமி வி.டி. பாளையத்தை சேர்ந்த ரஞ்சிதம் (55), அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா (50), பிச்சனூர் ஆர்.எஸ். நகரை சேர்ந்த வசந்தா (45) ஆகிய மூன்று பெண்களும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story